சீர்காழி கொள்ளிடம் வட்டாரத்தில் பருவமழையை எதிர்பார்த்து நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
சீர்காழி வட்டாரத்தில் ஆலவெளி,தெற்கிருப்பு,எடக்குடிவடபாதி,தென்னலக்குடி,வைத்தீஸ்வரன்கோயில்,திருப்புன்கூர்,கன்னியாக்குடி,எம்பாவை,திருவெண்காடு,எடமணல்,வருஷபத்து,கண்ணுக்கினியனார்கோயில், பச்சைமாதானம்,நல்லூர்,புத்தூர்,சோதியக்குடி உட்பட பல்வேறு இடங்களில் சம்பா சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சீர்காழி,கொள்ளிடம் வட்டாரத்தில் சுமார் 24,900ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நேரடி நெல்விதைப்பு மற்றும் நாற்றாங்கால் நடவு சாகுபடி செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.
நிகழாண்டு மேட்டூர் அணையிலிருந்து தாமதமாக பாசனத்திற்கு செப்டம்பர் 1}ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டும்,பாசனநீர் கடை மடை பகுதிகளான சீர்காழி,கொள்ளிடம் வட்டார பகுதி கிராமங்களுக்கு முழுமையாக வந்து சேரவில்லை.தெற்குராஜன்,புதுமண்ணியாறு,பொறைவாய்க்கால்,கழுமலையாறு போன்ற பிரதான பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் பல இடங்களில் மோட்டார் பம்பு செட் மூலம் பாய்நாற்றாங்கால் தயார் செய்தும், நாற்றுகள் வாங்கியும் சம்பா நடவு பணியை சில விவசாயிகள் தொடங்கியுள்ளனர். மற்ற பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால்,சம்பா நேரடி விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுப்பட்டுள்ளனர். இதற்காக தங்களது நிலங்களை டிராக்டர் மூலம் உழுது,புழுதியடித்து பண்படுத்தி வருகின்றனர்.இவ்வாறு ஏக்கருக்கு சுமார் ரூ.10ஆயிரம் வரை செலவு செய்து நேரடி விதைப்பு பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். எல்நினோ தாக்கம் காரணமாக வெயில் அதிகமாக உள்ளநிலையில்,பாசன வாய்க்கால்களும் வறண்டு காணப்படுகிறது. உரிய நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கினால் மட்டுமே சம்பா சாகுபடி இலக்கு எட்டப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.















