திருவாரூரில் சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை அழித்து, நீர்நிலைகளை அழித்து, சுற்றுச்சூழலை சீர்கெடுக்கும் நிலையை கைவிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக அரசுடன் பொதுமக்களும் கைகோர்த்து செயல்பட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க #Nowforclimate என்பதன் மூலம் இப்போதே களமிறங்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை*
இந்த பரந்துபட்ட பூமியையும், அதன் மீது உள்ள இயற்கை வளங்களையும் காப்பாற்றும் சுற்றுச்சூழல் நிகழ்வுகளை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நவீன விஞ்ஞான, தொழில்துறை வளர்ச்சி காரணமாக சுற்றுச்சூழல் கடுமையாக மாற்றப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை முறையாக பாதுகாக்க தவறவிட்டதன் விளைவுகளை, மனிதர்கள் தற்போது அனுபவிக்க தொடங்கிவிட்டனர். மரங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையான உறவு மிகவும் முக்கியமானது.
சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை பொருத்தமட்டில், ஒவ்வொரு தனி மனிதனின் உள்ளத்திலும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் அடிப்படையில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டின் உலகளாவிய மையக்கருத்தாக “இயற்கையில் இருந்து உத்வேகம் பெறுவோம்.. கால நிலைக்காக, நமது எதிர்காலத்திற்காக..” Inspire by Nature: For climate,For our future என்ற கருத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் கால நிலைக்காக #இப்போதே செயல்படுவோம் என்ற ஹேஷ்டேக் #Nowforclimate மூலம் பிரச்சாரம் முழக்கம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருவாரூர் வனம் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் வனம்.கலைமணி கூறும்போது…
சிறு குழந்தைகள், சிறுவர்கள் மத்தியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் அதனை வளர்த்தெடுக்க கூடிய பொறுப்பு பெரியோர்களுக்கு உண்டு. ஆனால் அவர்கள் அதை செய்ய தவறி விடுகின்றனர். இதனால் சிறுவயது முதல் சுற்றுச்சூழல் ஆர்வத்தில் இருந்து வரும் குழந்தைகளின் மனம் மாற்றப்பட்டு சுற்றுச்சூழல் மேலும் பாதிப்புக்கு உள்ளாகிறது .
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாம் தவறவிட்ட விஷயங்கள் எவ்வளவோ உண்டு. நமது முன்னோர்கள், நமக்காக, எந்த வித இயந்திரங்களும் இல்லாமல், உருவாக்கிக் கொடுத்த நீர் நிலைகளை பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டி மாசுபடுத்துகிறோம். நம் வீட்டில் உள்ள குப்பை வெளியே சென்றால் போதும் என்ற மனநிலை தான் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் தனியார்மய, தாராளமய கொள்கைகளால், நுகர்வு கலாச்சாரம் அதிகமாகி வருகிறது. இதுதான் நம் உலகத்தை திணறடித்து வருகிறது. நுகர்வு கலாச்சாரம் மூலம் தேவையற்றதை வாங்கி குப்பையாக மாற்றும் நாம், குப்பை மேலாண்மையை சரிவர கையாள முடியாமல் அரசுகள் தவிக்கின்றன. வீட்டிலிருந்து நாம் கொடுக்கும் குப்பையை தரம் பிரித்து தர வேண்டும்.நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும். மேலும் குப்பைகளை எரிப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும்.
வளர்ச்சி என்ற பெயரில் காடுகள் அழிப்பு, சாலையோரம் மரங்கள் அழிப்பு, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஏற்கனவே நமது முன்னோர்கள் நட்டு வைத்த நாட்டு மரங்களை முற்றிலும் அழிப்பது, சாலை விரிவாக்கத்தின் போது நீர் நலைகளை பாதி அளவு ஆக்கிரமித்து நீர் நிலைகள் அளவை குறைப்பது, இவ்வாறு வளர்ச்சி என்ற பெயரில் அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் செய்வது சுற்றுச்சூழலுக்கு எதிராக உள்ளது.
சுற்றுச்சூழல் பேணி பாதுகாப்பதற்கு அரசாங்கம் பல்வேறு செயல்களை செய்ய வேண்டி இருந்தாலும், தனி நபர்கள் நாமும் ஒரு சில விஷயங்களை செய்தாக வேண்டும். குறிப்பாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் , பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும், பிளாஸ்டிக்கை முறையாக அப்புறப்படுத்த வேண்டும், வீட்டில் இருந்தே குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும், பொது இடங்களில் ஒவ்வொருவரும் ஒருவரும் மரக்கன்று நட்டு பராமரிக்கலாம், இவ்வாறு நாம் செய்யும் சிறு சிறு விஷயங்கள் கூட வருங்கால சந்ததிக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெரிய அளவில் கை கொடுக்கும் என நம்பிக்கையுடன் பேட்டி அளித்தார்.













