நாகப்பட்டினத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்: தப்பியோடிய நபருக்கு வனத்துறை வலைவீச்சு
நாகப்பட்டினம் அருகே வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான கடல் அட்டைகளை வனத்துறையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினத்தை அடுத்த செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில், தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள மணிகண்டன் என்பவரது வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 90 கிலோ எடையுள்ள பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. சர்வதேச சந்தையில் இவற்றின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் அனைத்தும் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள மணிகண்டனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.















