“ஜாதி, மதம், மதுவுக்கு இணையானது சினிமா போதை” – சீமான் விமர்சனம்

திருவள்ளூர் : “ஜாதி, மதம், மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்த கூட்டம் இருக்கிறது. ஆனால், அதே அளவுக்கு ஆபத்தான திரைப்போதை குறித்து யாரும் பேசுவதில்லை,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் அவர் உரையாற்றியபோது,

“இந்தக் காட்டுக்குள் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலும் கண்ணில் படவில்லை. ஆனால், அணில்கள் போன்ற உயிர்களே காடு வளரும் அடிப்படை. அதுபோல மக்களுக்கான அரசியல் தான் நாட்டை வளப்படுத்தும். வாக்குக்காக நிற்பவர்கள் இந்த மாநாட்டை நடத்த முடியாது, மக்களுக்காக நிற்பவர்களால்தான் நடக்கும்,” என்றார்.

அப்துல்கலாம் அவர்களின் ஊக்கத்தில் நடிகர் விவேக் தொடங்கிய பசுமை இயக்கத்தை நினைவுகூர்ந்த அவர், “விவேக் 36 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்தார். ஆனால், காடுகளை அழித்து சாலைகளை அமைத்து, பின்னர் தூய காற்றுக்காக கோடிகள் ஒதுக்குவது அரசின் முரண்பாடான செயலாகும்,” என்று கூறினார்.

சீமான் தனது உரையில் ஆட்சிக்கு வந்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களையும் அறிவித்தார்:

10 ஆண்டு பசுமை திட்டம், பல கோடி பனை மர திட்டம். ஒவ்வொரு குழந்தையின் பிறப்பிலும் ஒரு மரம் நடவு செய்து, குழந்தையின் பெயர் மரத்திற்கும் சூட்டுதல்

பெண் குழந்தை பிறந்தால் ரூ.5,000 வைப்புத்தொகை, மண வயதில் ரூ.10 லட்சம் வழங்குதல்

மாணவர்கள் மரங்களை நட்டு வளர்த்தால் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள், வேலை வாய்ப்பில் முன்னுரிமை

1000 மரக்கன்றுகளை வளர்த்தவர்களுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

மரங்களை வெட்டினால் 6 மாத சிறை தண்டனை

திரைப்போதை குறித்த விமர்சனம்

மேலும் அவர், “ஜாதி, மதம், மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்த கூட்டம் இருக்கும். ஆனால், அதற்குச் சமமான திரைப்போதை குறித்து யாரும் பேசுவதில்லை. கலைக்கு மதிப்பு கொடுங்கள், ஆனால் அதை சரியான இடத்தில் வைத்துக் கொண்டாடுங்கள். நடித்து நோட்டைக் கொடுக்கலாம்; ஆனால் நடிப்பை நிறுத்தினால் நாட்டையே தரலாம்,” என்று நடிகர்களை நோக்கி கடுமையாக விமர்சித்தார்.

Exit mobile version