திருவாரூர் நகரில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் செல்லும் அவலம் – இந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு முறைக்கு மேல் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு…
டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவக்கூடிய அபாயம் உள்ளதால் உடனடியாக தெரு முழுவதும் பரவி குளம் போல் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குடிநீர் வரி, சொத்து வரி உள்ளிட்ட வரிகள் கட்டவில்லை என்றால் உடனடியாக களத்துக்கு வந்து வசூலிக்கும் திருவாரூர் நகராட்சி நிர்வாகம் இதனைக் கண்டு கொள்ளவே இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
திருவாரூர் நகராட்சிக்குள் வசித்து வந்தாலும் எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாமல், காட்டுவாசி வாழ்க்கையை தான் வாழ்ந்து வருவதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருவாரூர் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் அனைவருக்கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட நெய்விளக்கு தோப்பு பகுதியில் நகராட்சி நிர்வாகத்தினர் சாலையை தோண்டும் பொழுது கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயை உடைத்துள்ளனர். இதனால் உடைப்பு ஏற்பட்ட அந்த கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது.
உடைப்பு ஏற்பட்டு நேற்று முதல் சாலையில் குடிநீர் வீணாக செல்வதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த அதிகாரியும் நேரில் வந்து பார்க்காத காரணத்தினால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடி குளம் போல் தேங்கியுள்ளது.
இதனால் திருவாரூர் பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுவது இது ஒரு முறை மட்டுமல்ல இந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு முறைக்கும் மேல் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஆகவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நகராட்சிக்கு குடிநீர் வரி, சொத்து வரி, பாதாள சாக்கடை வரி என எந்த வரி கட்டவில்லை என்றாலும் உடனடியாக களத்துக்கு வந்து வசூலித்து செல்லும் அதிகாரிகள் நேற்று உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான குடிநீர் வீணாக செல்லும் நிலையிலும் அதனை கண்டும் காணாமல் அலட்சியமாக இருப்பது திருவாரூர் மக்கள் மத்தியில் திருவாரூர் நகராட்சி மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்பகுதி மக்கள் கூறும் போது இப்பகுதியில் உள்ள 35 குடும்பத்தினரும் திருவாரூர் நகராட்சிக்குள் வசித்து வந்தாலும், எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி காட்டுவாசி வாழ்க்கை தான் வாழ்ந்து வருவதாக இப்பகுதி மக்கள் மிகுந்த மன வேதனையுடன் வேதனை தெரிவிக்கிறனர்
பேட்டி : சந்தோஷ் மற்றும் பாப்பாத்தி – அப்பகுதி மக்கள்















