6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் நல்லசிவன், எம்எல்ஏ திருப்பதி தொடங்கி வைத்தனர்
சென்னை திருவான்மியூரில் இன்று பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்க தொடக்க நிகழ்ச்சி, திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது.
இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 236 மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருப்பதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 788 பள்ளிகளில் பயிலும் 69,098 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் தற்போது 6 முதல் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திராணி மற்றும் மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர்கள் அசோகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.













