வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப், சர்வதேச வர்த்தகத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய வரிவிதிப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக “பரஸ்பர வரி விதிப்பு” (Reciprocal Tariff) செயல்படுத்தப்படும் என அவர் கூறினார். இதை தொடர்ந்து அனைத்து நாடுகளுக்கும் பொதுவான வரிவிதிப்பு அறிவிப்பை வெளியிட்டார். சீனா மட்டும் பதிலடி கொடுக்கும் வகையில் பதில்தொகை வரிகளை அறிவித்துள்ளது. மற்ற நாடுகள் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
90 நாட்களுக்கு இடைநிறுத்தம்
உலக நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, டொனால்ட் டிரம்ப் இந்த வரிவிதிப்பை 90 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளார்.
ஆப்பிளுக்கு எச்சரிக்கை
சமீபத்தில், ஆப்பிள் நிறுவனத்துக்கு கடுமையான எச்சரிக்கையொன்றை டிரம்ப் விடுத்தார். “இந்தியாவில் ஐபோன் தயாரித்தால் 25% வரி விதிக்கப்படும். இந்தியாவிலோ அல்லது வேறு எந்த வெளிநாட்டிலோ ஐபோன்கள் தயாரித்து அமெரிக்காவுக்கு அனுப்புவதை விரும்பவில்லை. அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும்,” என அவர் கூறினார்.
சாம்சங் நிறுவனத்திற்கும் எச்சரிக்கை
இந்நிலையில், ஆப்பிளைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனத்திற்கும் அதே வகை வரி விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். “வரி விதிப்பு என்பது ஆப்பிளுக்கே மட்டும் அல்ல. சாம்சங் மற்றும் இதுபோன்ற நிறுவனங்களுக்கும் பொருந்தும். அவர்கள் அமெரிக்காவில் தொழிற்சாலை அமைத்தால் மட்டும் வரிவிலக்கு கிடைக்கும்,” என அவர் வலியுறுத்தினார்.
சாம்சங் உற்பத்தி நாடுகள்
சாம்சங் தற்போது தனது ஸ்மார்ட்போன்களை வியட்நாம், இந்தியா, தென் கொரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில், வியட்நாமில் தயாரிக்கப்படும் சாம்சங் மொபைல்களுக்கு 46% வரி விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க உற்பத்திக்கு ஊக்கம்
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்காவின் உற்பத்தி துறையை ஊக்குவிக்கும் நோக்கத்தில்தான் மேற்கொள்ளப்படுவதாக, வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.