சென்னை : நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இனிமேல் தங்களது விவாகரத்து தொடர்பான எந்தவொரு அறிக்கையும் வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் 15 ஆண்டுகளாக திருமண உறவு இருந்து வந்தது. இந்நிலையில், கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். மேலும், ஜெயம் ரவி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவும் தாக்கல் செய்துள்ளார்.
சமீபத்தில், பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவி ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, ஆர்த்தி ரவியும் ஜெயம் ரவியும் மாறிமாறி சமூக ஊடகங்களில் அறிக்கைகள் வெளியிட்டு வந்தனர்.
இதனால், தன்னைப் பற்றிய அவதூறான கருத்துகள் வெளியிடப்படுவதாகக் கூறி, ஆர்த்தி மற்றும் அவரது தாயின் மீதான தடை கோரி ஜெயம் ரவி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, இருபுறமும் சமாதானமாக இருக்க ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், இருவரும் இனிமேல் சமூக வலைதளங்களில் அறிக்கைகள் வெளியிடவும், விவாதிக்கவும் கூடாது எனத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிக்கைகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.