ஸ்ரீபெரும்புதூர் அருகே கேட்டரிங் வேலைக்கு வந்த உத்தரப் பிரதேச இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டீக்கடையில் ஏற்பட்ட தகராறில் வீட்டை காலி செய்ய வலியுறுத்தப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
__
உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சைலேஷ்குமார், (வயது 24. ) இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்காக கடந்த 5 ஆம் தேதி தமிழகம் வந்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே பால்நல்லூர் அடுத்த செலையனூர் கிராமத்தில் வாடகை அறை எடுத்து தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு, அதே பகுதியில் டீக்கடை வைத்திருப்பவருக்கும், மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் சைலேஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட வீட்டு உரிமையாளர் ஞானமூர்த்தி, சைலேஷ்குமாரை வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த சைலேஷ்குமார், அதே பகுதியில் தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் பணிபுரியும் தனது சக ஊழியர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்காததால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள் சென்று பார்த்தபோது, சைலேஷ்குமார் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவ பணியாளர்கள், சைலேஷ்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், சைலேஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது கொலையா? அதிகப்படியான மது அருந்தியதால் ஏற்பட்ட மரணமா? அல்லது உடல்நலக் கோளாறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டீக்கடைக்காரர் மற்றும் வீட்டு உரிமையாளர் ஞானமூர்த்தியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
















