வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கார்த்திகைதீபம் ஏற்றப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்திபெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இங்கு கருவறையில் ஏழு அடி உயரத்தில் காட்சிதரும் முருகப்பெருமான் சந்தனகாப்பு அலங்காரத்தில் நவரத்தின கிரீடம் அணிந்து காட்சியளித்தார்.
முற்காலத்தில் வல்லன் எனும் அசுரனை முருகப்பெருமான் அழித்து கோயில் கொண்டமையால் இத்தலம் வல்லக்கோட்டை என்று வழங்கப்படுகிறது. சத்ரு சம்கார யாகம் செய்து வழிபடுவது இங்கு பரிகார சிறப்பாகும்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்தலம் அருணகிரி சுவாமிகளால் திருப்புகழ் பாடப்பெற்றதாகும்.
இந்திரன், வல்லக்கோட்டை முருகனை வழிபட்டு இந்திராணியை கல்யாணம் செய்து கொண்ட புராண சிறப்பு வாய்ந்தமையால் இது கல்யாண பரிகாரத் தலமாகவும் உள்ளது.
இங்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் திரண்டனர். அதிகாலையில் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு கோபூஜைக்குப் பிறகு மூலவருக்குப் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம், விபூதி ஆகிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பிறகு சந்தனகாப்பு நடைபெற்று நவரத்தின கிரீடமும் ரோஜா, சாமந்தி மரக்காய் மாலைகளும் அணிந்து ராஜ அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார். அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சென்று மூலவரை வழிபட்டனர்.
கார்த்திகை தீப உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் சுப்பிரமணிய சுவாமிக்குக் கார்த்திகை வின்மீனைப் பிரதிபலிக்கும் அறுகோண ஷடாட்சர நட்சத்திர மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மலர் நட்சத்திர வடிவத்தின் நடுவில் காட்சியருளும் முருகப்பெருமானைச் சரணகோஷத்துடன் பக்தர்கள் தரிசித்தனர்.
மாலை 6 மணிக்கு மயில் மண்டபத்தில் 6 பெரிய அகல்விளக்குகளில் நெய் ஊற்றி திரியிட்டு பூஜிக்கப்பட்டு கார்த்திகை தீபம் ஏற்றப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து அனைத்து சந்நிதிகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படவுள்ளது. இரவு வடகிழக்கு பிரகாரத்தில் சொக்கப்பனை ஏற்றப்படவுள்ளது. தீப உற்சவத்தை முன்னிட்டு திருக்கோயில் கோபுரம், பிராகாரங்கள் அனைத்தும் வண்ண மின் விளக்குகளால் ஒளிர்ந்தன.
கார்த்திகை தீபம் செவ்வாயன்று வந்தமையால் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்தருந்தனர். அவர்களுக்குத் தேவையான குடிநீர் முதலிய அடிப்படை வசதிகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
பொது தரிசனத்தில் சென்ற பக்தர்கள் இரண்டு மணிநேரம் காத்திருந்தும் விரைவு தரிசனத்தில் சென்றவர்கள் சில மணித்துளிகளிலும் சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மண்டல இணை ஆணையர் திரு.சி.குமரதுரை அவர்களின் அறிவுரைப்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் செய்திருந்தார்.








