தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; சம்பா சாகுபடிக்கு ஏற்ற மழை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி!
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக மழை இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இதனிடையே, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.அதன்படி, தரங்கம்பாடி, பொறையார், திருவிடைக்கழி, திருக்கடையூர், தில்லையாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.திடீரென பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருப்பினும், தற்போது சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பயிர்களின் வளர்ச்சிக்கு இந்த மழை சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.







