மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, மிகவும் தாழ்வாகப் பறநது மூன்று முறை வட்டமடித்த ஜெட் விமானம் காரணமாக பரபரப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மன்னம்பந்தல் பகுதியில் 7 மாடி கட்டிடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இன்று பிற்பகல்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றுவது போல் மிகவும் தாழ்வான நிலையில் ஜெட் விமானம் ஒன்று பறந்து சென்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தினமும் ஜெட் விமானங்கள் பறந்து வருவது வாடிக்கையான ஒன்று என்றாலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மிகவும் தாழ்வாகப் பறந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் மூன்று முறை ஜெட் விமானம் வட்டமடித்து பறந்தது. விமானம் பறந்து செல்லும் பொழுது பெருத்த சத்தம் ஏற்பட்டது. தஞ்சாவூர் பகுதியில் அமைந்துள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து பறந்து வந்த பயிற்சி விமானமாக இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

















