ஆன்மீகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதியில், அய்யாவின் 194-வது அவதார தின விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த சில நாட்களாகவே திருச்செந்தூர் பகுதி அய்யாவழி பக்தர்களின் ‘அய்யா சிவ சிவ அரகரா’ என்ற முழக்கத்தால் ஆன்மீக அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வுகள் நேற்று அதிகாலை 5 மணி முதல் தொடங்கின. அதிகாலையில் பணிவிடை மற்றும் உகப்படிப்புடன் தொடங்கிய விழாவில், காலை 6 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது. பகல் 12 மணிக்கு உச்சி படிப்பு பணிவிடை மற்றும் அன்னதர்மம் வழங்கும் நிகழ்வுகள் தொடர்ந்தன. மாலை 6 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் பவனியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து திரு ஏடு வாசிப்பு, சிறுவர் சிறுமியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, இரவு 11 மணிக்கு குரு சிவ சந்திரன் வழங்கும் அய்யாவழி இன்னிசை நிகழ்ச்சி அரங்கேறியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான அவதார தின விழா இன்று புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்த்தல் மற்றும் அபயம் பாடுதல் ஆகிய நிகழ்வுகளுடன் தொடங்கியது. காலை 6:27 மணிக்குச் சூரிய உதயத்தின் போது, கடல் பதமிட்டு சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை மேளதாளங்கள் முழங்க அவதார பதிக்கு அழைத்து வரும் வைபவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவதார தின சிறப்புப் பணிவிடைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதர்மம் மற்றும் இனிமம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் திருச்செந்தூர் முருகன் கோயில் தக்கார் அருள் முருகன், முன்னாள் எம்.எல்.ஏ ரெட்டியார்பட்டி நாராயணன், அவதார பதி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சந்திரசேகர், நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கிரகாம் பெல் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் கடலில் புனித நீராடி அய்யாவைத் தரிசித்தனர்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சி. மதன் அவர்களின் உத்தரவின் பேரில், திருச்செந்தூர் உட்கோட்ட ஏ.எஸ்.பி. மகேஷ் குமார் மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் கோயில் வளாகம் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் இரவு பகலாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி டாக்டர் சி. மதன், பணியில் இருந்த காவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது ஏ.எஸ்.பி. மகேஷ்குமார், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மதுரை வீரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ். தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் கோபால் நாடார் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர்.













