மயிலாடுதுறை நகராட்சியில் முடிவுற்றதாக கூறப்பட்ட பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள்; குற்றச்சாட்டு. ரூ.1.46 கோடி மதிப்பில் குளம் மேம்பாடு செய்ததாக பணிகளை முடிக்காமலேயே பணத்தை எப்படி நகராட்சி வழங்கியது என்று கேள்வி கேட்டு வறுத்தெடுத்த கவுன்சிலர் :-
மயிலாடுதுறை நகர்மன்றத்தின் மாதாந்திர கூட்டம் நகரமன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சாலை, குளங்களை கட்டமைத்தல் உள்ளிட்ட பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுகவில் இருந்து தவெகவுக்கு கட்சி மாறியுள்ள 29-வது வார்டு கவுன்சிலர் ரஜினி என்பவர் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 14 குளங்களின் கரைகள் கட்டமைக்கப்பட்டு நடைபாதையுடன் மின்விளக்குகள் பொருத்தி மேம்படுத்திய திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார். 14 குளங்களில் 12 குளங்கள் பணிகள் முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளதாக நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் தெரிவித்த நிலையில் பணிகள் முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட 35-வது வார்டில் உள்ள வண்ணான்குளம் ஒரு கோடியே 46 லட்சம் 50 ஆயிரம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் முடிவடையாமல் இருக்கும்போது பணிகள் முடிந்ததாக எப்படி பணத்தை கொடுத்தீர்கள் என்றும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு ஒரு கவுன்சிலர் உங்களது வார்டு குறைகளை மட்டும் பேசுங்கள் என்று கூறியதற்கு பணியே செய்யாமல் அரசு நிதியை எப்படி விடுவித்தீர்கள்? பதில் சொல்லவில்லை என்றால் முதலமைச்சர்களிடம் புகார் தெரிவிப்பேன் என்று கடுமையாக சாடினார். தொடர்ந்து நகரமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் இல்லாமலேயே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக குற்றம் சாட்டிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.













