தவெகவில் இணைவது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை!
எந்த நெருக்கடியும் என்னைக் கட்டுப்படுத்தாது; அரசியலில் நேரம் வரும்போது முடிவை அறிவிப்பேன் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ் பேட்டி..
திருவாரூர், நவ.26:
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுத்து அறிவிப்பேன் என்றும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். காமராஜ் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் விரைவில் அமைக்கப்பட வேண்டும் என்றும், தற்போது மெதுவாக நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை தரமாகவும் விரைவாகவும் முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளேன். மன்னார்குடி சுற்றுவட்டச் சாலைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு சுமார் ரூ.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயப் பணிகள் இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன். விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நிலையை ஆய்வு செய்ய டெல்டா மாவட்டங்களுக்கு, குறிப்பாக திருவாரூர் மாவட்டத்திற்கு, குழு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டதன் மூலம் மன்னார்குடி தொகுதிக்கு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வர முடிந்துள்ளது. பாதாளச் சாக்கடைத் திட்டத்தை தரமான முறையில் நிறைவேற்றவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அரசியலில் அதற்கான நேரமும் சூழ்நிலையும் வரும்போது செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டே முடிவெடுப்பேன். தவெகவில் இணைவது தொடர்பாக எனக்கு எந்தவிதமான நெருக்கடியும் கிடையாது. எந்த நெருக்கடியும் என்னைக் கட்டுப்படுத்தாது என்றார்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு தப்பிக்கக் கூடாது. சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும்.
மன்னார்குடி நகராட்சியைத் தூய்மையான நகராட்சியாக மாற்றுவதுடன், பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் தொடர்ந்து கவனம் செலுத்துவேன் என எஸ். காமராஜ் தெரிவித்தார்.







