மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் (TNGEA) மயிலாடுதுறை மாவட்டம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகர் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அருள்பெருமாள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இளவரசன் கோரிக்கைகளை விளக்கி தொடக்க உரையாற்றினார். TNGPA மாநிலச் செயலாளர் பழனிவேலு நிறைவுரையாற்றினார். , பல்வேறு அரசு ஊழியர் மற்றும் தோழமை சங்கங்களின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில்
கூட்டுறவுத்துறை பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 17(a) குற்றக்குறிப்பாணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், ஊழியர்கள் மீது எதேச்சதிகாரப் போக்குடன் செயல்படும் கூட்டுறவுத்துறை பதிவாளரின் நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறவேண்டும், அரசு ஊழியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக சங்கம் அமைத்துப் போராடுவதைத் தடுக்கும் வகையிலும், அலுவல் சாரா கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது மற்றும் அரசின் ஊழியர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கக் கூடாது என ஊழியர்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்டுள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அவுட்சோர்சிங் TNPSC மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசுப் பணிகளில் நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்ற இளைஞர்களின் எதிர்கால நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில், OMCL (Overseas Manpower Corporation Limited) நிறுவனம் மூலம் தமிழக அரசின் அனைத்துத் துறைகளுக்கும் அவுட்சோர்சிங் (ஒப்பந்த) முறையில் ஆட்களை நியமிக்க வெளியிடப்பட்டுள்ள அரசிதழ் அறிவிப்பைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இப்போராட்டத்தில் மாவட்ட, வட்ட நிர்வாகிகள், துறைவாரி சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.







