மயிலாடுதுறை அருகே நீடூரில் மாமியாரை வீட்டுக்குள் நுழையக்கூடாது என உறவுக்கார பெண்களுடன் சேர்ந்து மருமகள் தாக்கியதில் படுகாயம் அடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மெஹர்நிஷா(74). தனது கணவர் கட்டிய வீட்டில் அவரது மறைவுக்குப் பிறகு மகன் இர்ஃபான், மருமகள் சாய்தா பானு (42) மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மகன் இர்ஃபான் பணி நிமித்தமாக மலேசிய நாட்டுக்கு சென்று விட்ட பின்னர், மெஹர் நிஷாவை மருமகள் சாய்தாபானு கடந்த சில ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வந்ததா கூறப்படுகிறது. மருமகளின் கொடுமை அதிகரித்ததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று தனது சகோதரர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார் மெஹர் நிஷா. இந்நிலையில் வீட்டில் வைத்திருந்த தனது ஆடைகளை எடுப்பதற்காக தனது சகோதரரின் மகள்களின் துணையோடு மெஹர் நிஷா வீட்டுக்கு சென்றுள்ளார். அவரை வீட்டுக்குள் வரக்கூடாது என்று தடுத்து, சாய்தாபானு, அவரது தாய் மற்றும் சகோதரிகள் இணைந்து மூதாட்டி மெஹர் நிஷாவை கை, கால் மற்றும் நெஞ்சில் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மூதாட்டியை உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை மாவட்ட அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு மூதாட்டிக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூதாட்டி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூதாட்டியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













