நாகப்பட்டினம் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர வாய்க்காலில் கவிழ போன லாரி – சாதுர்யமாக நிலை நிறுத்திய லாரி ஓட்டுநர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள்
பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் உள்ள துறைமுகத்திலிருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு, சிலக் என்ற ஒரு வகை மணலை ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே லாரி வந்தபோது எதிரே வந்த மற்றொரு லாரிக்கு வழி விடுவதற்காக இடது புறமாக லாரியை ஓரங்கட்டி உள்ளார் ஓட்டுநர் முருகானந்தம்.
இதனால் எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் உள்ள தடுப்பில் மோதி சாலையோர வாய்க்காலில் கவிழும் வகையில் லாரி சென்றது. உடனடியாக சுதாரித்துக் கொண்டு லாரி ஓட்டுநர் லாவகமாக லாரியை சாலையோர வாய்க்காலில் விழாமல் சாதுரியமாக நிலை நிறுத்தி உள்ளார்.
இருந்த போதும் வாய்க்காலில் கவிழாமல் நின்ற லாரியின் ஒரு பகுதி சக்கரங்கள், சாலையிலும் மற்றொரு பகுதி சக்கரங்கள் வாய்க்காலிலும் ஆபத்தான முறையில் நின்றன.
திருவாரூரில் காலை நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்தால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள், அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்கள் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டனர்.
நாகப்பட்டினம் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக லாரி அப்புறப்படுத்தாமல் இருந்ததால் அப்பகுதியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நோயாளிகளை ஏற்றுக்கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கிக்கொண்டன.
தொடர்ந்து காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















