மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து நடத்துநர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே சாலை மறியல்:-
மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் ஆற்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்.(50). அரசு பேருந்து நடத்துநரான இவர் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் பொறுப்பாளராக உள்ளார். தமிழ்ச்செல்வன் வழக்கம் போல் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு தனது ஸ்ப்ளெண்டர் டூவீலரில் பணிக்கு சென்றுள்ளார். தமிழ்ச்செல்வன் முழுவதும் வீட்டிற்கு போன் செய்து பேசவில்லை என கூறப்படுகிறது. நேற்று இரவு வெகு நேரம் ஆகியும் தமிழ்ச்செல்வன் வீடு திரும்பாத நிலையில் சுமார் இரவு 11 மணியளவில் ஆனந்ததாண்டவபுரம் ரயில்வே கேட் அருகே ஆற்காடு சாலையில் மர்ம நபர்களால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.. இது குறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் விரைந்து வந்து இறந்த தமிழ்ச்செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிந்து கொலைக்காண காரணம் தெரியாத நிலையில் முன்விரோதமா அல்லது வேறு காரணங்களால் இந்த கொலை நடந்ததா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட எஸ்பி. சினேகா பிரியா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். நான்கு தனிப்படை அமைத்து கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து இன்று காலை முதல் கிராமத்தினர் தொழிற்சங்கத்தினர் ஏராளமான மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் திரண்டனர். கொலை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்காமல் போராட்டம் நடத்திய நிலையில் மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராகவன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மருத்துவமனையில் திரண்ட பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்ற போது அரசு மருத்துவமனை வாயில் கேட்டை மூடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யகோரி மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே கிட்டப்பா அங்காடி முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் உயிரிழந்த தமிழ்ச் செல்வனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அளித்த வாக்குறுதியின் பெயரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.














