ஒப்பந்த நியமன முடிவுக்கு எதிர்ப்பு: அரசு மருத்துவமனைகளில் இன்று கருப்புப் பட்டை அணிந்து தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் செவிலியர்கள் நூதனப் போராட்டம்:
பேட்டி: ராம்குமார் மாநில துணை செயலாளர் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்
அரசு மருத்துவமனைகளில் ₹21,000 தொகுப்பூதியத்தில் 4,724 செவிலியர்களை 11 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரியும், தேர்தல் வாக்குறுதிப்படி தற்காலிகப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் செவிலியர்கள் இன்று கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். புதிதாகத் தொடங்கப்பட உள்ள 6 செவிலியர் கல்லூரிகளில் ஒப்பந்த நியமன முறையைக் கைவிட வேண்டும், காலியிடங்களை MRB மூலம் முறைப்படி நிரந்தரமாக நிரப்ப வேண்டும் மற்றும் கரோனா காலத்தில் பணியாற்றி நீக்கப்பட்ட 2,500 செவிலியர்களுக்கு மீண்டும் முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்தவாறே முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ள செவிலியர்கள், செப்டம்பர் 30 அன்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அரசு தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாகச் செவிசாய்க்காவிட்டால், மாநிலச் செயற்குழுவைக் கூட்டிப் போராட்டத்தை அடுத்தகட்டமாகத் தீவிரப்படுத்தப் போவதாகவும் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.














