விபத்தை ஏற்படுத்திச் சென்ற மர்ம நபரை கைது செய்யக்கோரி பல்லவராயன் பேட்டை நரிக்குறவர் காலனி அருகே நரிக்குறவர்கள் ஒன்று திரண்டு சாலை மறியல்..
மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் மலர்கொடியான் (65). இவர் 9ம் தேதி இரவு பல்லவராயன்பேட்டை மெயின்ரோட்டில் இயற்கை உபாதை கழிக்க நடந்து சென்றபோது பின்னால் நீடூரில் இருந்து அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார், மலர்கொடியான் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மலர்கொடியன் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 13ம் தேதி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக மலர்கொடியன் வாகன விபத்தில் சிக்கியபோது மயிலாடுதுறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று பல்லவராயன் பேட்டை மெயின்ரோட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் நரிக்குறவர் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்து நடந்து 20 நாட்களுக்கு மேலாகியும் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி சென்றது யார் என்றும், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்காத தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் மயிலாடுதுறை நீடூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.














