கூத்தாநல்லூர் நகர் பகுதி முழுவதும் நிலவும் நாய்க்கடி சம்பவத்தை கட்டுப்படுத்த கோரியும், நடவடிக்கை எடுக்க மறுக்கும் கூத்தாநல்லூர் நகராட்சியை கண்டித்தும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகர் பகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தெரு நாய்களுடன் சேர்ந்து வளர்ப்பு நாய்களும் அவ்வப்போது பெரும்பாலானோரை கடித்து குதிறி வைக்கும் சூழலும் நிலவி வருகிறது. இதனை கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது.
இது தொடர்பாக கூத்தாநல்லூர் நகராட்சியை கண்டித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், முற்றுகைகள், சாலை மறியல் என பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கண்மூடி, காது கேளாமல் இருக்கும் கூத்தாநல்லூர் நகராட்சியை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக விளமல் பகுதியில் இருந்து பேரணியாக சென்ற எஸ்டிபிஐ கட்சியினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எஸ் டி பி ஐ கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் சாயிதா பபிசா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
நாய்க்கடி சம்பவத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்து கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதால், உடனடியாக கூத்தாநல்லூர் நகராட்சியை கலைத்துவிட்டு, நகராட்சி ஆணையரை பதவி நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நாய் கடி சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத கூத்தாநல்லூர் நகராட்சியை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பான சூழல் நிலவியது
பேட்டி: பாயிதா ஷபிகா – எஸ் டி பி ஐ கட்சி மாநில மகளிர் அணி தலைவர்














