குற்றவாளிகளைப் பாதுகாக்கும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை: நாகப்பட்டினத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்;
சிறு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜெம்கிரானைட் உரிமையாளர் வீரமணியைப் பாதுகாத்த காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவர் மாலா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் சுபாதேவி, மாவட்டப் பொருளாளர் மீரா, மாவட்டக் குழு உறுப்பினர் சுமதி மற்றும் தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கவிதா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய சங்க நிர்வாகிகள், பல ஆண்டுகளாகச் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டு வந்த நபருக்கு ஆதரவாகக் காவல்துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாகச் செயல்பட்டுப் பாதுகாத்து வருவதாகக் குற்றம்சாட்டினர். பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்து உரிய நடவடிக்கை கோரியபோதும், போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கைக் காவல்துறையினரே மழுப்ப முயன்றதாகவும், குற்றவாளிக்கு ஆதரவாகக் காவல்துறை செயல்படுவது ஒட்டுமொத்த சமூகத்திற்கே தலைகுனிவு என்றும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பெண்களுக்குப் பூரண பாதுகாப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தவர்கள், தற்போது தொடர்ச்சியாக அரங்கேறி வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டுகொள்ளாமல் மவுனம் சாதிப்பதாகக் குற்றம்சாட்டினர். ஐந்து வயதுச் சிறுமி முதல் அறுபது வயது மூதாட்டி வரை யாருக்குமே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக வேதனை தெரிவித்த அவர்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும், அவர்களுக்குத் துணைபோகும் காவல்துறை அதிகாரிகள் மீதும் தமிழக அரசு எவ்வித பாரபட்சமுமின்றி உடனடியாகச் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.














