மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள பிரச்னை, பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்:-
மயிலாடுதுறை அரசினர் பெரியார் மாவட்ட மருத்துவமனையில் 160 தூய்மைப் பணியாளர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். ஒரு தொழிலாளிக்கு ரூ.18,894 ஊதியம் வழங்குவதாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுடன் ஒப்பந்த நிறுவனமான ஸ்மித் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால், அந்த தொகை முழுமையாக தொழிலாளர்களுக்கு வழப்படுவதில்லை.
இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் ஆக.28-ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆக.27-ஆம் தேதி மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருதரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது, ஒப்பந்தப்படி சம்பளம் வழங்குவதாக ஒப்புக்கொண்ட ஒப்பந்த நிறுவனம் ரூ.3000 குறைத்து சம்பளம் வழங்கியுள்ளனர். இதையடுத்து ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 160 ஒப்பந்த தொழிலாளர்கள் மூன்று ஷிப்டுகளாக பணியாற்றி வரும் நிலையில், காலை ஷிப்டில் பணியாற்றும் 50 க்கு மேற்பட்டோர் தங்கள் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, உழைப்போர் உரிமை இயக்க மாநில செயலாளர் வீரச்செல்வன் கூறியது: ஸ்மித் நிறுவனம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உறுதியளித்த சம்பளத்தை வழங்காமல் கூலித்திருட்டில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் உடனடியாக அரசு பெரியார் மருத்துவமனையை விட்டு வெளியேற வேண்டும். மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், பிளம்பர், எலக்ட்ரீசியன், சலவைத் தொழிலாளி, சமையல் தொழிலாளி உள்ளிட்ட தொழிலாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தமிழக முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஆண்டுகள் பணிமுடித்த தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றார்.













