மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு:- மயிலாடுதுறை நகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஓவியப்பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா திருவள்ளுவரின் ஓவியத்தை வரைவதைப் போன்ற படத்தை பார்வையிட்டார்:-
மயிலாடுதுறையில் உள்ள மதீனா லாட்ஜ் என்ற விடுதியில், திரு.வி.க., புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் முன்னிலையில் ஓவியப்பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மாவால் வரையப்பட்ட திருவள்ளுவரின் படமே அவரது திருவுருவமாக இன்றைக்கு உலகினரால் அறியப்படுகிறது. கே.ஆர்.வேணுகோபால் திருவள்ளுவரின் உருவத்தை வரைவதைப் போன்ற படம் மயிலாடுதுறையில் உள்ள தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. இதனை, மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ஆய்வுக்காக வந்துள்ள பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் பார்வையிட்டு, மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக அமைச்சருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மலர்க்கொடி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், மயிலாடுதுறை திருக்குறள் பேரவை மற்றும் மயிலாடுதுறை தமிழ்ச்சங்க பொறுப்பாளர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

















