மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளி வேன் பின்சக்கரத்தில் சிக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு. பள்ளி வேனில் அக்கா வருவதை பார்த்துவிட்டு அக்காவை அழைக்க வந்த அம்மாவின் பின்னால் ஓடிவந்த சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் கிராமமக்கள் கதறல். பாலையூர் போலீசார் டிரைவரை கைது செய்து விசாரணை:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம், சித்தாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி(50) என்பவரது மூத்த மகள் மகிழினி (7), தேரழுந்தூரில் உள்ள தனியார் (நிஷா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி) பள்ளியில் 2-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இன்று வழக்கம்போல் பள்ளி முடிந்து மாணவி பள்ளி வேன் மூலம் வீடு திரும்பியுள்ளார். மாலை சுமார் 5:30 மணியளவில் சித்தாம்பூரில் உள்ள வீட்டின் அருகே வேன் வந்து நின்றபோது, மாணவியின் தாய் குழந்தையை இறக்குவதற்காக வேனின் முன்பக்கப் படி அருகே சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த 3 வயது இளைய மகள் இதழினி அக்காவை பார்த்தவுடன் வீட்டிலிருந்து ஓடி வேனின் பின்புறம் வந்துள்ளார். சிறுமி பின்பக்கம் நிற்பதை கவனிக்காமல் வேனை ரிவர்சில் டிரைவர் இயக்கியபோது வேன்மோதி சிறுமி பின்சக்கரத்தில் சிக்கி தலைப் பகுதி பலத்த சேதமடைந்தது. ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியுள்ளார். ஆபத்தான நிலையில் சிறுமியை உடனடியாக மீட்டு மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், இதயத் துடிப்பு குறைந்து சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து குழந்தையின் உடல் மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தை கணேசமூர்த்தி அளித்த புகாரின் பேரில், பாலையூர் காவல் நிலைய போலீசார் பள்ளி வேன் டிரைவர் தேரழந்தூரை சேர்ந்த தமிழ்வாணன் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வேன் மோதி 3 வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அறிந்து உறவினர்கள், சித்தாம்பூர் கிராமமக்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அனைவரம் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

















