சமூக சீர்திருத்தவாதியும்,, ஆன்மீக குருவுமான ஸ்ரீநாராயண குருவின் பெருமைகளைப் போற்றும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ் மலையில் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
நாராயண குருவின் 172 ஜெயந்தி விழா, மருந்துவாழ் மலையில் உள்ள தர்ம மடத்தில் நடந்தது. எய்ம்பா அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வுக்கு, தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
அரூபானந்தர், சொரூபானந்த சுவாமிகள் தலைமையில் வேள்வி பூஜைகள் நடந்தன. தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் செய்து வணங்கினர்.
நிகழ்வுக்கு தலைமை வகித்த எய்ம்பா மாநில தலைவர் இராமச்சந்திரன் பேசும்போது; “கேரள மாநிலத்தில் பிறந்திருந்தாலும் தமிழர்களுக்கும் உரித்தானவர் ஸ்ரீநாராயண குரு. தேவாரம், திருவாசகத்தில் அவர் நிபுணத்துவம் பெற்றிருந்தார். தமிழ்த்தாய் வாழ்த்து இயற்றிய மனோன்மணியம் சுந்தரனாரும், இருவரும் தமிழ் மொழி குறித்து செழுமையான விவாதங்களை நடத்தி உள்ளனர்.
தேசிய கீதம் இயற்றிய, ரவீந்திரநாத் தாகூர், நாராயண குருவை போல வேறு ஒருவரை தன் வாழ்நாளில் கண்டதில்லை என்று புகழாரம் சூட்டிய பெருமைக்கு உரியவர். நாராயண குருவை அவரது ஆசிரமத்தில் தங்கி, சந்தித்தது நான் பெற்ற பேறு என மகாத்மா காந்தியால் புகழாரம் சூட்டப்பட்டவர்.
தமிழ்நாடு முழுவதும் நாராயண குருவை அறிந்து கொள்ளும் வகையில், அவரது ஜெயந்தி நாளில் தமிழக அரசு மரியாதை செய்வதோடு தமிழ்நாடு முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும். அவரது பெருமையை போற்றும் வகையில் அவர் சித்தி அடைந்த மருந்துவாழ் மலையில் மணிமண்டபமும் அமைக்க வேண்டும். அதற்கு உரிய உதவிகளையும் வழங்க தயாராக இருக்கிறோம்.” என்று வலியுறுத்தி பேசினார்.

















