நாகை அருகே வடிகால் வாய்க்காலை மூடி வீட்டுமனை அமைக்கும் தனிநபர்: 25,000 மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்; மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பேட்டி: ஆறுமுகம் வீ தி லீடர்ஸ் நாகப்பட்டினம் மாவட்ட அமைப்பாளர்
நாகப்பட்டினம் ஒன்றியம், பாலையூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடகுடி சாலையில் உள்ள முக்கிய வடிகால் வாய்க்காலைத் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து மூடி வருவதால், மழைக்காலத்தில் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் வீ தி லீடஸ்
அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாலையூர், தெத்தி, வடகுடி, சிவசித்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை காலங்களில் தேங்கும் மழைநீர் மற்றும் வெள்ளநீர், இந்த வடகுடி சாலை வடிகால் வாய்க்கால் வழியாகத்தான் சாலவந்தோட்டம் குளத்திற்குச் சென்று, பின்னர் ஆற்றில் கலப்பது வழக்கம். இப்பகுதிகளில் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழரசன் என்பவர் இந்த வடிகால் வாய்க்கால் தனது பட்டா நிலத்தில் வருவதாகக் கூறி, மணல் கொட்டி வாய்க்காலை மூடிவிட்டு வீட்டுமனை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் சாதாரண மழை பெய்தால்கூட குடியிருப்புப் பகுதிகளில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கி, படகில் செல்லும் அளவிற்கு வெள்ளக்காடாகும் சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து வடிகால் வாய்க்காலை மீட்டுத் தர வேண்டும்; தவறும்பட்சத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று வீ தி லீடர்ஸ் நாகப்பட்டினம் அமைப்பாளர் ஆறுமுகம் மற்றும் அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
















