மயிலாடுதுறை நகராட்சி பாதாள சாக்கடை கழிவு நீரால் சுகாதார சீர்கேடு. ரஸ்தா மனவெளி தெருவில் ஒரு மாதத்திற்கு மேலாக பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தொடும் நிலையில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்துவதாக குற்றச்சாட்டு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு 2007ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதாளசாக்கடை திட்டம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் பாதாளசாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு 30க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளில் பெரிய பல்லங்கள் ஏற்பட்டு சரி செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் ஆய்வுக்கு வந்த சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் 100 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடையை புனரமைக்க அரசுக்கு பரிந்துரைத்தனர். தொடர்ந்து பாதாள சாக்கடை பராமரிப்பு, விடுபட்ட இடங்களில் புதிதாக பாதாளசாக்கடை திட்டம், குழாய்கள் மாற்றுதல், புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு ரூபாய் 82 கோடி திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தற்போதும் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலைகளில் ஆழ் நுழைவு தொட்டிகள் வழியாக மாருதிநகர், அவையாமபாள்புரம, பட்டமங்கலத்தெரு, கூரைநாடு, உட்பட பல இடங்களில் வழிந்தோடி மயிலாடுதுறை நகரில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. நகராட்சி நிர்வாகம் வாய்க்கால்கள், ஆறுகள், மழைநீர் வடிகால்களில் பாதாள சாக்கடை கழிவுநீரை விடுவதாகவும் பொதுமக்களால் குற்றம்சாட்டப்படுகிறது. ரஸ்தா மனவெளி தெருவில் கடந்த ஒரு மாதமாக பாதாள சாக்கடை கழிவுநீர் ஆழ்நுழைவுத் தொட்டி வழியாக சாலையில் வழிந்தோடி கடுமையான துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் நிலையில், கொசு தொல்லை காய்ச்சல், உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு ஆளாவதாக கூறியுள்ள அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரவில்லை என்றும் தினந்தோறும் தங்கள் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடுவதால் கடுமையாக அவதி அடைந்து வருவதாக குற்றம் சாட்டி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.















