ஆடி கிருத்திகை: சிக்கல் சிங்காரவேலருக்கு 5,000 லிட்டர் பால் அபிஷேகம் — திரளான பக்தர்கள் தரிசனம்!
ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நாகப்பட்டினம் அடுத்துள்ள புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் திருக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற சிறப்பு வழிபாடும், 5,000 லிட்டர் பால் அபிஷேகமும் விமரிசையாக நடைபெற்றது.
”வேல் வாங்கிய ஸ்தலம்” என கந்தபுராணம் போற்றும் இத்தலத்தில், திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்ய முருகப்பெருமான் தனது தாயாரிடம் வேல் பெற்றதாக வரலாறு கூறுகிறது.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் வளாகத்தில் சிறப்பு யாகத்துடன் வழிபாடுகள் தொடங்கின. தொடர்ந்து, கார்த்திகை மண்டபத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக எழுந்தருளிய சிங்காரவேலருக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் 5,000 லிட்டர் பால் பயன்படுத்தப்பட்டதோடு, யாகசாலையிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் ‘ஆயிரம் கண் சல்லடை’ வைத்தும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அபிஷேகத்தைத் தொடர்ந்து, சுவாமிக்கு வெண்பட்டாடை உடுத்தி, வண்ண வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
சிறப்பு தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மட்டுமின்றி, திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோவிலில் குவிந்தனர். “வேலும் மயிலும் துணை”, “முருகா முருகா” என்ற சரண கோஷங்களுடன் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.













