மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் பிறந்த இல்லத்திலுள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் நினைவஞ்சலி
மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள அவரது பிறந்த இல்லத்தில் திமுகவினர் இன்று திரண்டு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.
நாகப்பட்டினம் மாவட்ட திமுக செயலாளர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருக்குவளையில் அமைந்துள்ள கலைஞர் பிறந்த இல்லத்திற்குச் சென்ற திமுகவினர், அங்குள்ள அவரது பெற்றோர் முத்துவேலர் – அஞ்சுகம் அம்மையார் மற்றும் சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முரசொலி மாறன் ஆகியோரின் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, அதே வளாகத்தில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, திரளான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் அஞ்சலி செலுத்தியதுடன், அமைதி காத்து மௌன அஞ்சலியும் செலுத்தினர்.
இந்நிகழ்வில் திமுகவின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் முக்கிய முன்னோடிகள் பலர் கலந்துகொண்டனர்.













