மயிலாடுதுறையில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் வீடு, மின் கம்பங்கள் சேதம்:- ஆள்நடமாட்டம் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்ப்பு:-
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட கங்கை நகரில், காவிரி ஆற்றுப் புறம்போக்கு பகுதியில் 52 குடும்பத்தினர் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. இன்று மதியம் இந்த ஆலமரத்தின் மிகப்பெரிய கிளை திடீரென முறிந்து அருகில் இருந்த சாந்தி என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வீட்டின் மேற்கூரை முழுவதுமாக சேதமடைந்ததுடன், சுவர்களும் இடிந்து பாதிக்கப்பட்டது. மேலும், அருகில் இருந்த மின் கம்பங்கள் மற்றும் முனீஸ்வரன் கோயிலின் மேற்கூரையிலும் சேதம் ஏற்பட்டது.
சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பொதுமக்கள் தகவலில்பேரில் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத்தை துண்டித்தனர். ஆனால், பெரிய அளவிலான கிளையை அகற்ற முடியாது என தெரிவித்ததாகவும், அதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னர், கிளை மிகப்பெரியதாக இருப்பதால் அதை அகற்ற இயலாது என திரும்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து முறிந்து விழுந்த கிளையை அகற்றி, சேதமடைந்த வீட்டை சீரமைக்க தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













