கன்னியாகுமரி மாவட்டம்: ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றியடைய வரலாற்று பிரசித்தி பெற்ற நாகராஜா கோவிலில் 101 லிட்டர் பால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை மேற்கொண்ட கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட த.வெ.க. கட்சியினர்
நீண்ட எதிர்பார்ப்புகள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டி நாகர்கோவிலில் வரலாற்று பிரசித்தி பெற்ற நாகராஜா கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் த.வெ.க.வின் தீவிர தொண்டரும், தொழிலதிபருமான பால்ராஜ் சிறப்பு ஏற்பாட்டில் இந்த வழிபாடு நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.
இன்று காலை கோவில் வளாகத்தில் ஒன்று திரண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மூலவர் நாகராஜா சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர். முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு 101 லிட்டர் பால் அபிஷேகம் செய்து த.வெ.க.வினர் வழிபட்டனர். திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையுலகில் புதிய சாதனைகளைப் படைத்து வெற்றிபெற வேண்டும் என்றும், கட்சித் தலைவர் விஜய்யின் மக்கள் பணி சிறக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தனர்.














