சீர்காழி அடுத்த திருநகரி பிடாரி அம்மன் கோயிலில் கடந்த பல ஆண்டுகளாக நிறைவடையாமல் உள்ள தொடங்கப்பட்ட திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் செய்து அம்மன் வீதியுலா புறப்பாட்டினை நடத்திட பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநகரி கிராமத்தில் அமிர்தவல்லி தாயார் உடனாகிய கல்யாண ரெங்கநாதர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் பெருமாள் தேவியர்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பல்வேறு சிறப்புகளையுடைய இக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்திட தீர்மானிக்கப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த 2ஆண்டுக்கு முன்னர் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. திருப்பணிகள் நிறைவடையாமல் கால தாமதம் ஆவது குறித்து ஆன்மீக அன்பர்கள் ஆலோசனை செய்தபோது இக்கோயிலின் உபகோயிலாகவும், எல்லை தெய்வமாகவும் விளங்கும் பவுன்டு அடி தெருவில் அமைந்துள்ள பிடாரி அம்மன் கோயில் பாலாலயம் செய்து 20ஆண்டுகள் ஆகியும் கும்பாபிஷேகம் செய்யமுடியாமல் உள்ளது. உபகோயில் கும்பாபிஷேகம் செய்தால் கல்யாணரெங்கநாதர் கோயில் குமாபிஷேகமும் விரைந்து முடியும் என நம்பும் பக்தர்கள் உபகோயில் கும்பாபிஷேகம் செய்திட உள்ள தடைகளை அகற்றி ஆக்கிரமிப்புகளை நீக்கி திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் செய்து அம்மன் புறப்பாட்டினை நடத்தினால் தான் சுபிட்ஷம் இருக்கும் எனவும் இந்து சமய அறநிலையத்திறையினர் விரைந்து தீர்வு கண்டு நடவடிக்கை எடுத்திட பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.















