மதுரை மாநகராட்சியில் கடந்த மூன்று மாதங்களாக மாமன்றக் கூட்டம் நடைபெறாததன் காரணமாக, தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட தினக்கூலி உயர்வு அரசாணை காகித அளவிலேயே முடங்கிக் கிடக்கிறது. மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் குப்பை அகற்றும் பணிக்காகச் சென்னையைச் சேர்ந்த ‘அவர் லேண்ட்’ என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் சுமார் 3,234 தூய்மைப் பணியாளர்களும், 600 ஓட்டுநர்களும் பணியாற்றி வருகின்றனர். தற்போதைய சூழலில் இவர்களுக்குத் தினக்கூலியாக ரூ.590 வழங்கப்பட்டு வருகிறது. தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தக் கோரி பணியாளர்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக, அவர்களின் தினக்கூலியை ரூ.624 ஆக உயர்த்தி அரசு உத்தரவிட்டது. சென்னை உள்ளிட்ட மற்ற மாநகராட்சிகளில் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், மதுரையில் மட்டும் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
இந்த ஊதிய உயர்வை வழங்க வேண்டுமானால், அதற்கு மாநகராட்சி மாமன்றத்தின் (Council) அதிகாரப்பூர்வ ஒப்புதல் அவசியமாகும். மாமன்றத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே உயர்த்தப்பட்ட தொகையைத் தங்களால் வழங்க முடியும் என்பதில் ஒப்பந்த நிறுவனம் உறுதியாக உள்ளது. ஆனால், மதுரை மாநகராட்சியில் மேயர் மற்றும் மண்டலத் தலைவர் பதவிகள் கடந்த பல மாதங்களாகக் காலியாக உள்ளதால், மாமன்றக் கூட்டம் நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் நிர்வாக ரீதியான முக்கிய முடிவுகள் எடுப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “ஊதிய உயர்வு வழங்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்; ஆனால் மாமன்ற ஒப்புதல் இல்லாததால் தொழில்நுட்ப ரீதியாகத் தாமதம் ஏற்படுகிறது” எனத் தெரிவித்தனர். இதற்கிடையே, மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு உத்தரவு உள்ளதால் தற்போதைக்குத் துணை மேயரின் ஒப்புதலுடன் இந்த உயர்வை அறிவிக்கலாம் என்றும், பின்னர் நடக்கும் கூட்டத்தில் இதற்கான பின்னேற்பு அனுமதியைப் (Ratification) பெற்றுக் கொள்ளலாம் என்றும், இதற்குப் பெரிய சட்டச் சிக்கல்கள் இருக்காது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா (அ.தி.மு.க) கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும், ஒரு மேயரை நியமிக்க முடியாத நிலையில் ஆளுங்கட்சி இருப்பது வருந்தத்தக்கது என்று கூறிய அவர், மாமன்றக் கூட்டம் முடங்கியுள்ளதால் தூய்மைப் பணியாளர்களின் ஊதிய உயர்வு மட்டுமல்லாமல், சுகாதாரப் பிரிவுக்குத் தேவையான மருந்துகள் கொள்முதல் செய்வது, புதிய பணியாளர் நியமனம் மற்றும் நகரமைப்புப் பிரிவில் காலி மனைகளுக்கான அனுமதி வழங்குவதில் நிலவும் தேக்கம் எனப் பல சிக்கல்கள் உள்ளதாகச் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக மாநகராட்சிக்கு வரவேண்டிய பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தூய்மைப் பணியாளர்களின் நலன் மற்றும் மாநகராட்சியின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.












