சேலம்: சமூக வலைதளத்தில் காதல் வலையில் சிக்கிய பிளஸ்–2 மாணவியிடம், நகை, லேப்டாப், மொபைல் போனை பறித்துச் சென்ற சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன், ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் ஈரோட்டைச் சேர்ந்ததாக கூறிய ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. தன்னை ‘ராகுல்’ என்றும், ஈரோட்டில் வசித்து கல்லூரியில் படிக்கிறேன் என்றும் கூறிய அந்த நபருடன் தொடர்ந்து உரையாடி வந்த மாணவி, பின்னர் காதலில் சிக்கினார்.
இதன் பின்னர், “உன்னை நேரில் பார்க்க வேண்டும்” எனக் கூறிய ராகுலின் வார்த்தைகளுக்கு இணங்க, மாணவி கடந்த 1-ம் தேதி சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்டு, சேலத்தில் இறங்கினார். அங்கு இரவு 9 மணியளவில் ராகுலை சந்தித்தார்.
அப்போது மாணவி கழிப்பறை செல்ல வேண்டும் எனக் கூறியபோது, “இங்கு திருட்டுகள் அதிகம் நடக்கின்றன, நகைகளை யாராவது பறித்துவிடுவார்கள். நீ அணிந்த நகைகளையும், வைத்திருந்த லேப்டாப், மொபைல் போனையும் எனக்குக் கொடுத்து விட்டு செல்” என்று ராகுல் கூறியுள்ளார்.
அதை நம்பிய மாணவி, 2 வளையல், சங்கிலி உள்ளிட்ட 4 பவுன் நகைகள், லேப்டாப், மொபைல் போனை அவரிடம் ஒப்படைத்தார். ஆனால், சில நிமிடங்களில் திரும்பியபோது ராகுலை காணவில்லை. தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது மொபைல் எண் அணைக்கப்பட்டிருந்தது.
பின்னர் பெற்றோரிடம் தகவல் தெரிவித்த மாணவி, அவர்களுடன் சேர்ந்து சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.













