பொதுத்துறை நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் (IREDA) மார்ச் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு 49% அதிகரித்த நிகர லாபத்துடன் முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. கடந்த நான்காவது காலாண்டில் IREDA ரூ.501.55 கோடி லாபத்தை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் அதே கால கட்டத்தில் இருந்த ரூ.337.39 கோடியுடன் ஒப்பிட்டால் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எனலாம். நிறுவனத்தின் கடன் வழங்கல் நடவடிக்கைகள் மற்றும் நிதி மேலாண்மை திறமையாக நடைமுறைக்கு வந்ததற்கான பலனாக இந்த உயர்வு பதிவாகியுள்ளது.
மேலும், நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து கிடைத்த மொத்த வருமானம் 37% உயர்ந்து ரூ.1,905.06 கோடியாகவும், வட்டி வருமானம் 40% உயர்ந்து ரூ.1,861.14 கோடியாகவும் இருந்தது. இதனிடையே, மொத்த செலவுகள் 41% அதிகரித்து ரூ.1,284.75 கோடியை எட்டியது. மார்ச் காலாண்டில் லாபத்தில் இந்த அளவிற்கு மேம்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 16 காலை 9.30 மணிக்கு NSE சந்தையில் ஐஆர்இடிஏ பங்கு விலை 6.9% உயர்ந்து ரூ.178.45 என வர்த்தகமானது. இது பங்கின் ஆல்டைம் ஹைட் நோக்கி பயணிப்பதைக் காட்டுகிறது.
ஆனால், நிதியாண்டு முழுவதிலும் IREDA-வின் வளர்ச்சி சீராக இருந்ததாகவே கூறப்படுகிறது. 2023-24ஆம் நிதியாண்டில் நிகர லாப வரம்பானது 25.22% இருந்த நிலையில், செயல்பாட்டு லாப வரம்பும் 33.92% இருந்து 31.01% ஆக குறைந்துள்ளது. இதனால், பல்வேறு நன்மைகளைப் பெற்றாலும், நிறுவனம் சில சவால்களையும் எதிர்நோக்கியுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதற்கிடையில், ஏப்ரல் 15ம் தேதியன்று, காலாண்டு முடிவுகள் வெளியாகும் முன் பங்கின் விலை 9% க்கும் மேலாக உயர்ந்த நிலையில் ரூ.168.16 ஆக முடிந்தது. கடந்த மாதத்தில் மட்டும் 20% உயர்வு காணப்பட்ட நிலையில், இந்த நிதியாண்டு தொடங்கிய பிறகு மட்டும் பங்கு விலை 24% வரை சரிந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. எனினும், தற்போதைய வளர்ச்சித் தரவுகள், பங்குகளை மீண்டும் உயர்த்தும் வாய்ப்பை சுட்டிக்காட்டுவதாக முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.