குறிஞ்சிப்பை வடக்கு தாங்கள் அம்மச்சார் அம்மன் கோவிலில் 13-வது ஆண்டு ஆடி பெருவிழா கோலாகலம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த குறிஞ்சிப்பை வடக்கு தாங்கள் பகுதியில் உள்ள அருள்மிகு அம்மச்சார் அம்மன் திருக்கோவிலில் 13-வது ஆண்டு ஆடி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், பந்தக்கால் நடுதல், காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. சனிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடைபெற்றதுடன், சிலம்பம் மற்றும் கம்பம் மாணவர்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து, குறிஞ்சிப்பை தண்டாயுதபாணி கோவிலில் பூஜை செய்யப்பட்ட பால்குடம் மற்றும் முளைப்பாரியுடன், சிவவாத்தியங்கள் முழங்க 600-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
பின்னர் நடைபெற்ற கூழ்வார்த்தல் திருவிழாவில் ஏராளமான பெண்கள் கூழ் படையல் இட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வடக்கு தாங்கள் அம்மச்சார் அம்மன் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.













