அபின் ஹரிஹரன் இயக்கத்தில், புதிய நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் 96 பட நடிகை கௌரி கிஷன் நடித்துள்ள அதர்ஸ் திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, படத்தின் பாடல் தொடர்பாக நடிகை கௌரி கிஷனை தூக்கினீர்களே, அவரின் எடை என்ன? எனும் கேள்வியை சில யூடியூபர்கள் கதாநாயகனிடம் எழுப்பினர்.
இந்த கேள்வி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து, பின்னர் தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு அளித்த பேட்டியில் கௌரி கிஷன், “இத்தகைய கேள்விகள் முற்றிலும் தேவையற்றதும், மரியாதையற்றதும் ஆகும். ஒரு நடிகரிடம் இப்படி கேள்வி கேட்டிருப்பார்களா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது,” என்று தெரிவித்தார்.
மேலும், சமீபத்தில் நடைபெற்ற அதர்ஸ் படத்தின் மற்றொரு செய்தியாளர் சந்திப்பிலும் இதேபோன்ற கேள்விகள் எழுந்தன. அதற்கு பதிலளித்த கௌரி கிஷன், “உடல் எடை பற்றிய கேள்விகள் உருவக் கேலிக்குச் சமம். இதுபோன்ற கேள்விகள் சரியானவை அல்ல,” என்று தெளிவாக கூறினார்.
கௌரி கிஷனின் துணிச்சலான பதில் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பல நடிகர்களும், ரசிகர்களும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு ஆதரவு தெரிவித்தது.
இதையடுத்து, கௌரி கிஷன் சமூக ஊடகத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:
“ஒருவரின் உடல் அமைப்பை குறிவைக்கும் கேள்விகள் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும், இதுபோன்ற கேள்வி எழுப்பியவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டாம். எனக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி. இது நான் எதிர்பார்க்காத ஒன்று.”
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து யூடியூபர் R.S. கார்த்திக் விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், “நான் எழுப்பிய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அது மூலம் நடிகை கௌரி கிஷனுக்கு மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் வருந்துகிறேன்,” என்று தெரிவித்தார்.

















