மக்கள் நலக் கூட்டணியால் ஆட்சியை இழந்தோம்; அடுத்த தேர்தலில் 33% வாக்குகளுடன் ஆட்சி அமைப்போம்” – விழுப்புரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.எல். வெங்கடேசன் ஆவேசப் பேச்சு!
விழுப்புரம் நகராட்சித் திடல் அருகே தேமுதிக சார்பில் நடைபெற்ற கேப்டன் விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் விழா, தேமுதிக 23-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் கொடியேற்று விழா ஆகிய “முப்பெரும் விழா பொதுக்கூட்டம்” மாவட்டக் கழகச் செயலாளர் எல். வெங்கடேசன் (Ex. MLA) தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆவேசமாகப் பேசிய எல். வெங்கடேசன், மக்கள் நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிக்காலம் முடிவதற்குள் வேறு கட்சிக்குச் செல்வதைக் கடுமையாக விமர்சித்ததுடன், மதுராந்தகம், தாராபுரம் போன்ற தொகுதிகளில் கட்சி மாறியவர்களுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டியிருக்க வேண்டும் என்றார். மேலும், 2016 சட்டமன்றத் தேர்தலில் வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி செய்த அரசியல் சூழ்ச்சியாலேயே தேமுதிக ஆட்சியை இழந்து விஜயகாந்த் முதலமைச்சராகும் வாய்ப்பு கைநழுவியது என்றும், திமுக பலத்தால் வெற்றி பெற்றவர்கள் தற்போது தவெக தலைவர் விஜய்யை நோக்கிச் செல்வதாகவும் சாடினார். இறுதியாக, வரும் தேர்தலில் விஜய் 27 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்றும், தங்களது கூட்டணி 33 சதவீத வாக்குகளைப் பெற்று நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

















