சென்னை :
யூடியூப்பிலும், ‘டிராகன்’ திரைப்படத்திலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடையே பிரபலமான வி.ஜே சித்து, இப்போது இயக்குனராக அறிமுகமாகிறார். அவர் கதாநாயகனாகவும், இயக்குனராகவும் பணியாற்றும் புதிய திரைப்படம் ‘டயங்கரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கம் எல்.ஏ. ஸ்டூடியோவில் நடந்தது.
இப்படத்தில் வி.ஜே சித்து உடன் நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத் கான், ‘ஆதித்யா’ கதிர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவை பி. தினேஷ் கிருஷ்ணன் கவனிக்கிறார். இசையமைப்பாளர் சித்து குமார் இசை அமைக்கிறார். படத்தொகுப்பை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்கிறார். ஆடை வடிவமைப்பாளராக ஏ. கீர்த்தி வாசன், நடன இயக்குனராக அஸார் பணியாற்றுகிறார்கள்.
இளைய தலைமுறையின் வாழ்வியல், துடிப்பு மற்றும் கனவுகளை மையமாகக் கொண்டு நகைச்சுவை, உணர்ச்சி, சுய அடையாளம் ஆகிய அம்சங்களை இணைத்துப் படமாக்கப்படவுள்ளது ‘டயங்கரம்’.
படத்தின் இசையை வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை வழங்குகிறது.
தொடக்க விழாவில் திரைப்படக் குழுவினர் மற்றும் பல திரைப்பட பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர். படத்தின் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
















