மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கேவரோடை கிராமத்தில் விதிமுறைகளை மீறி செயல்படும் மணல்குவாரிகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி மணல் குவாரிகளை மூடக்கோரி கிராம மக்கள் புகார்:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த கேவரோடை கிராமமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மணல்குவாரிகளை மூடக்கோரி 50க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். கொள்ளிடம் அருகே வேட்டங்குடி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கேவரோடை கிராம மக்கள் அளித்த மனுவில் விவசாயத்தை பிரதானமாக கொண்டுள்ள வேட்டங்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயத்தை அழிக்கும் நிலைப்பாட்டை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. கேவரோடை, இருவக்கொல்லை, வெள்ளக்குளம் ஆகிய கிராமங்களில் விளைநிலங்களில் தனியார் மணல் குவாரிகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. விதிமுறைகளை மீறி தனியார் மணல்குவாரி உரிமையாளர்கள் மணல் எடுத்து வருகின்றனர். இது குறித்து புகார் அளித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் கடல்நீர் உட்புகுந்து கிராமத்தில் நிலத்தடிநீர் உப்புநீராக மாறி விவசாயம் முற்றிலும் அழியும் சூழலும், மக்கள் குடிநீருக்கு அலையும் நிலை உருவாகி வருகிறது. மணல்குவாரி அனுமதிக்கு பொதுமக்கள் எதிர்ப்புதெரிவித்த நிலையில் வருவாய்த்துறையினர் அறிவிப்பு நோட்டீஸ்கள் ஒட்டி முறையாக அனுமதிபெற்றுள்ளதாக கூறுகின்றனர். மணல்குவாரி நடத்துவது குறித்த எந்தவித கருப்புகேட்பு, விளம்பரங்கள் செய்யாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளனர். விதிமுறைகளை மீறி செயல்படும் மணல்குவாரிகளை மூடவேண்டுமென்று புகார் அளிக்கும் பொதுமக்களுக்கு மிரட்டல்கள் வருகிறது. எனவே விதிமுறைகளை மீறி செயல்படும் மணல்குவாரிகளை மூட வேண்டும். இல்லை என்றால் கிராம மக்கள் ஒன்றிணைந்து அறவழியில் போராட்டம் நடத்துவோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.













