2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிரமாக தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் இருந்து தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்க உள்ளார். 3 மாதங்கள் தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ள விஜய், முதல் பொதுக்கூட்டத்தை திருச்சியில் நடத்த உள்ளார்.
இதற்கான இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த நான்கு நாட்களாக காவல்துறை மற்றும் தவெக தரப்பில் பேச்சுவார்த்தை நீடித்தது. ஆரம்பத்தில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே கூட்டம் நடத்த அனுமதி கேட்ட நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக காவல்துறை மறுத்தது. பின்னர் மரக்கடை பகுதி அனுமதிக்கப்பட்டது.
ஆனால், போக்குவரத்து நெரிசல், அவசரகால வாகனங்கள் செல்லும் பாதை, வாகன நிறுத்துமிட வசதி போன்ற விஷயங்களில் காவல்துறை பல நிபந்தனைகளை முன்வைத்தது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு வரை நடந்த பேச்சுவார்த்தையில், தவெக தரப்பினர் மூன்று வாகன நிறுத்துமிடங்களைத் தாங்களே பராமரிக்க ஒப்புக்கொண்டனர். அவை ஸ்டார் தியேட்டர், தமிழ்ச் சங்கம் அருகிலுள்ள அரசு வாகன நிறுத்துமிடம் மற்றும் காந்தி மார்க்கெட் பகுதி.
மேலும், கூட்ட நெரிசலை சமாளிக்க தன்னார்வலர்கள், தீயணைப்பு வாகனம், 4 ஆம்புலன்ஸ்கள் போன்ற அவசர உதவி வசதிகளையும் ஏற்பாடு செய்வதாக தவெக உறுதி அளித்துள்ளது.
இதனை காவல்துறையினர் ஏற்றுக்கொண்ட நிலையில், இன்று காலை 11 மணிக்கு இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில் பிரச்சாரத்திற்கான அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கடந்த 4 நாட்களாக நீடித்த இழுபறி முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது.

















