திருவெண்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடிதடி பிரச்னையில் இளைஞர்கள் மோதிக் கொள்ளும் வீடியோ வைரல். ஒரு தரப்பினர் மீது போடப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனு அளிக்க வந்த 200-க்கு மேற்பட்டோரை ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே போலீசார் அனுமதிக்காததால் தள்ளுமுள்ளு. சாலைமறியல் போராட்டத்தால் பரபரப்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு காவல் சரகம் எம்பாவை கிராமத்தில் கடந்த 17-ஆம் தேதி பெருந்தோட்டத்தை சேர்ந்த அருண்(24) ராஜேஷ் ஆகிய இருவரும் பைக்கில் சென்றபோது எம்பாவை கிராமத்தை சேர்ந்த கௌதம்(24) என்பவர் எதிரே பைக்கில் வந்தபோது இருதரப்பினரும் மோதுவதுபோல் சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து அருண் திரும்பி வந்தபோது கௌதம் அருணை வழிமறித்து நிறுத்தியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரு தரப்பினர் ஆதரவாளர்கள் ஒன்று சேர இளைஞர்கள் இரு தரப்பினரும் கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இச்சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அருண் அளித்த புகாரில் திருவெண்காடு போலீசார் ஜாதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கௌதம், கணேஷ்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பைக்கில் சென்ற போது ஏற்பட்ட பிரச்னையில் காவல்துறையினர் ஜாதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ததை ரத்து செய்யக் கோரி பாதிக்கப்பட்ட இளைஞர்கள் குடும்பத்தினர், கிராமமக்கள் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் 200-க்கு மேற்பட்டோர் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் மனுகொடுக்க வந்தனர். அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் அகோரம், பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி மற்றும் திமுக, அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் 200-க்கு மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் அகோரம், பழனிச்சாமி ஆகியோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அவர்களை இறக்கிவிட்டால்தான் நகர்வோம் என்று கூறி கிராம மக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், ஆய்வாளர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அகோரம், பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகளை வேனில் இருந்து இறக்கிவிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் முக்கிய நிர்வாகிகளை மட்டும் உள்ளே அனுமதிப்போம் என்று கூறியதை அடுத்து மறியலை கைவிட்டனர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளே நுழையாமல் இருக்க ஆட்சியர் அலுவலக கேட்டுகள் மூடப்பட்டு, மனு அளிக்க வந்த பொதுமக்கள் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டதால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.













