எழுத்தாளர் மற்றும் எம்பி சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நாவல், 1 லட்சம் பிரதிகள் விற்பனையானதை ஒட்டி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் சங்கர், தொகுப்பாளர் கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்று, நூலுக்கான பாராட்டுகளை பகிர்ந்தனர்.
விழாவில் உரையாற்றிய நடிகர் ரஜினிகாந்த், “அறிவு சொல்லும் என்ன பேசணும், திறமை சொல்லும் எப்படி பேசணும், அரங்கம் சொல்லும் எத பேசணும். ஆனால் அனுபவம்தான், என்ன பேசணும், பேசக்கூடாதுனு சொல்லும்,” என தன் உரையைத் தொடங்கினார்.
அதே மேடையில் சில மாதங்களுக்கு முன்பு எழுத்தாளர் எவ்.வேலு எழுதிய ‘கலைஞர்’ பற்றிய நூல் வெளியீட்டு விழா நடந்ததாக கூறிய ரஜினி, “அந்த நிகழ்ச்சியில் முதல்வர், அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என முக்கியமானோர் இருந்தனர். அப்போது பேசும்போது பழைய ஸ்டூடன்ஸ் பற்றி சொல்ல நினைச்சேன். ‘அவங்கதான் தூண்கள், அடித்தளம். அவர்களில்லாம எந்த இயக்கமும் வளராது’னு சொல்லனும்னு நினைச்சேன். ஆனா எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சதால, மீதி சொல்ல மறந்துட்டன்” என அரங்கில் சிரிப்பலை உருவாக்கினார்.
மேலும், “இந்த நிகழ்ச்சிக்காக வரும்போது, ‘ரஜினிகாந்த், எல்லாரும் உங்க ரசிகர்களா இருக்க மாட்டாங்க, கவனமா பேசுங்க’னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே வந்தேன்” என்ற அவர், “இப்படியான நிகழ்ச்சிக்கு சிவகுமாராவை கூப்பிடலாமே. எவ்வளவு அறிவு, எவ்வளவு வாசிப்பு. அல்லது கமல்ஹாசனை கூட கூப்பிடலாம். ஆனா, 75 வயசாகியும் கூலிங் கிளாஸ் போட்டு ஸ்லோ மோஷன்ல நடந்து வர்ற இந்தாளவ கொஞ்சம் நியாயமா?” என தன் தனிச்சுவையில் பேசினார்.
பின், தன்னை பெரிதும் பாதித்த எழுத்தாளராக ஜெயகாந்தனை குறிப்பிட்ட ரஜினிகாந்த், “அவரது ‘யாருக்காக அழுதான்’ என்ற நூலை வாசித்த பிறகு 3 நிமிடங்கள் அழுந்தேன்” என உணர்வுப்பூர்வமாக கூறினார்.
இயக்குநர் சங்கர் குறித்து பேசும் போது, “தமிழ் சினிமாவை மாற்றிய முக்கிய இயக்குநர்கள் பாரதிராஜா, மணிரத்னம், சங்கர் என எண்ணப்பட வேண்டும். சங்கர் இயக்கும் வேள்பாரி அடிப்படையிலான படம் மிகுந்த வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்” என தெரிவித்தார்.