சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆணவ கொலை நடைபெற்றுள்ளதாக விசிகவினர் போராட்டம் நடத்திய நிலையில் என்ன செய்வது என்று தலைவர் திருமாவளவனிடம் கட்சியினர் ஆலோசனை நடத்தும் வீடியோ வைரல்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சாத்தங்குடியில் காதலித்து வந்த 17 வயது சிறுமியும், 19 வயது இளைஞரான பார்த்திபன் என்பவரும் கடந்த 30 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பொறையார் போலீசார் இயற்கைக்கு மாறான மரணமாக வழக்கு பதிவு செய்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இதனிடையே காதலர்களை பெண் வீட்டார் அடித்து ஆணவக் கொலை செய்து விட்டதாக காதலனின் உறவினர்கள், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பார்த்திபன் இறப்பதற்கு முன்பு முதல் நாள் தன்னை பெண் வீட்டார் ஜாதிப் பெயரை சொல்லி தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் சிறுமியின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் ஐந்து பேரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தலைவர் திருமாவளவனுடன் ஆலோசனைக் கேட்டு உரையாடும் வீடியோ வைரல் ஆகி உள்ளது. அந்த உரையாடலில் பேசிய திருமாவளவன் போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்வதற்கு இடமில்லை என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையின் படியே வழக்கை மாற்ற முடியும் என்பதால் பிரேத பரிசோதனை செய்வதை உரிய மருத்துவர் கொண்டு கண்காணிக்கவும் அந்த அறிக்கையை உடனே வழங்க வேண்டுமென்று பல்வேறு ஆலோசனைகளை கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி உள்ளது.














