2002ஆம் ஆண்டு வெளியான ‘Kaanta Laga’ இசை வீடியோ மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் ஷெஃபாலி. பின்னர், ‘முஜ்சே ஷாதி கரோகி’ திரைப்படத்தில் சல்மான் கான் உடன் நடித்தார். மேலும், 2019-ஆம் ஆண்டு வெளியாகிய ‘பேபி கம் நா’ என்ற வெப் சீரிஸிலும் நடித்தார். பல நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதோடு, இந்தி மொழியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 13 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.
இந்நிலையில், 42 வயதான ஷெஃபாலி நேற்று இரவு மாரடைப்பால் திடீரென காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், அவரது உடல் மருத்துவமனையிலிருந்து வீடு கொண்டு செல்லப்படும் காட்சிகள் மற்றும் இறுதி சடங்குகள் உள்ளிட்ட நிகழ்வுகளை மீடியாக்கள் ஒளிபரப்பியது சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடிகர் வருண் தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடும் எதிர்வினை வெளியிட்டுள்ளார். அதில்,
மற்றொரு ஆன்மாவின் மரணத்தை இவ்வாறு முறையற்ற வகையில் மீடியா காட்டியிருப்பது மனதை புண்படுத்துகிறது. ஒருவரின் துயரத்தை இப்படிப் பதிவு செய்யும் அவசியம் என்ன? இதைப் பார்த்து அனைவரும் சங்கடம் அடைகிறார்கள். இது யாருக்குப் பயன்படுகிறது? மீடியா நண்பர்களிடம் என் வேண்டுகோள், இறுதி பயணங்களை சிந்தனையுடன், மரியாதையுடன் காண்பிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.