விழுப்புரத்தில் காவிரி நீரை திறந்து விட்டதற்கு கர்நாடக வாகன ஓட்டிகளுக்கு மாலை அணிவித்து, இனிப்பு, தண்ணீர் வழங்கி நன்றி. தெரிவித்த தவெகவினர்.
விழுப்புரம் புதுவை எல்லை பகுதியான கெங்கராம்பாளையம் சோதனை சாவடி அருகே உள்ள தமிழக எல்லைப் பகுதியில், தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட்ட கர்நாடகாவிற்கு, புதுச்சேரியில் இருந்து கர்நாடகா நோக்கிச் சென்ற வாகனங்களை நிறுத்தி, வாகன ஓட்டிகளுக்கு தமிழக வெற்றி கழகத்தினர் மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்,
காவிரி நீர் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காண வேண்டும் என்றும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவும், தேசிய ஒற்றுமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அமைதியான முறையில் தங்களது கோரிக்கையை பதிவு செய்தனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, கர்நாடகா நோக்கிச் சென்ற வாகனங்களில் பயணித்தவர்களுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. மேலும், வாகனங்களுக்கு தேங்காய் உடைத்து, பாதுகாப்பான பயணத்தை வாழ்த்தி வழியனுப்பினர்.
இந்த நிகழ்ச்சி தமிழக வெற்றி கழகத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குஷி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.














