சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திலிருந்து இயக்குநர் சுந்தர்.சி விலகியதற்கான காரணம் குறித்து தயாரிப்பாளர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களிடம் பேசிய அவர், பீகார் சட்டமன்றத் தேர்தல் முதல் தனது தயாரிப்பில் உருவாகும் ரஜினி பட வரை பல விஷயங்களைத் தெளிவுபடுத்தினார்.
பீகார் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த கமல், “வெற்றி பெற்றவர்கள் அதை கொண்டாடும் உரிமை அவர்களுக்கே. நாம் பார்க்க வேண்டியது, அந்த வெற்றி எப்படி கிடைத்தது என்பதுதான். எஸ்.ஐ.ஆர் பற்றிய உண்மையை மக்களுக்கு தொடர்ந்து விளக்க வேண்டும்; நான் செய்யும் முயற்சியில் ஊடகங்களும் இணைந்து உதவ வேண்டும்,” என்றார்.
பின்னர் ரஜினிகாந்த் பட இயக்குனர் மாற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது அவர், “சுந்தர்.சி ஏன் விலகினார் என்பதை அவர் தானே விளக்கிவிட்டார். எனது பகுதியில் முக்கியமானது – என் நட்சத்திரத்திற்கு பிடிக்கும் கதையை தேர்வு செய்வதே. ரஜினிகாந்த் திருப்தி அடையும் வரை கதை விவாதங்கள் நடைபெறும். புதிய இயக்குனர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. கதை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை,” என்று கூறினார்.
மேலும், “நானும் ரஜினிகாந்தும் இணைந்து நடிக்கும் ஒரு புதிய கதையையும் தேடி வருகிறோம். தற்போது என் தயாரிப்பில் அவர் மட்டும் நடிக்கும் படம் உருவாகிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள்,” என்று தெரிவித்துள்ளார்

















