கண் துடைப்புக்காகவும், மக்கள் பிரதிநிதிகளை குஷிப்படுத்துவதற்காகவும் மட்டுமே கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன:- மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு அனைத்து துறை பிரதிநிதிகள் வராததால் பொதுமக்கள் ஆதங்கம்:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வரும் 10-ஆம் தேதி அனைத்து அரசு பள்ளிகளில் நடைபெற உள்ள பள்ளி மேலாண்மை குழு தேர்வில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொள்ள அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த பேசினர். இந்தக் கூட்டத்தில் அனைத்து துறைகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளாததால் கிராம மக்கள் தங்கள் குறைகளை யாரிடம் கூறுவது என குற்றம் சாட்டினர். இதுகுறித்து மாப்படுகையை சேர்ந்த கங்காதரன் என்பவர் கூறுகையில், கடந்த முறை கிராமசபை கூட்டத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வந்ததால் பொதுமக்களை வாகனங்களில் அழைத்து வந்து சட்டப்பேரவை உறுப்பினரை குஷி படுத்துவதற்காக கூட்டம் நடத்தினார்கள். ஆனால் இந்த முறை கூட்டம் குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால் மிகக் குறைவான அளவிலேயே பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் இந்த கூட்டத்தில் மின்சாரத்துறை, வட்ட வழங்கல் துறை, பேரிடர் மேலாண்மை துறை உள்பட முக்கிய துறைகளில் இருந்து எந்த அலுவலர்களும் பங்கேற்காததால் பொதுமக்களால் தங்கள் குறைகளை தெரியப்படுத்த முடியவில்லை. பெயரளவுக்காக மட்டுமே இந்த கூட்டம் நடத்தப்பட்டது என தெரிவித்தார்.
பேட்டி கங்காதரன் (கிராமவாசி, மாப்படுகை)
















